2026 டி20 உலகக் கிண்ணப் பட்டத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த போதிலும், சூர்யகுமார் யாதவ் டி:20 அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளார்.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, 2026 ஐபி எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய ஸ்ரேயஸ் ஐயரின் தலைமைப் பொறுப்பால் ஈர்க்கப்பட்டு, அவரை இந்தியாவின் புதிய டி:20 தலைவராக பொறுப்பேற்க வைக்க பரிசீலித்து வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (BCCI) வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஐபிஎல் தொடருக்குப் பின்னர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை இந்திய அணி மேற்கொள்வதற்கு முன்னர் இந்த மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர்களுக்காக இந்திய டி20ஐ அணியில் இளம் திறமைகளை அறிமுகப்படுத்தவும் BCCI முயன்று வருகிறது.
டி20 போட்டிகளில் இந்தியா சிறப்பான சாதனை படைத்திருந்த போதிலும், சூர்யகுமார் யாதவ் அண்மைய மாதங்களாக ஓட்டங்கள் எடுக்கத் திணறி வருகிறார். மேலும், 2026 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் வெறும் 195 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருப்பது அவரது துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் முதல் ஏழு ஆட்டங்களில் ஆறு வெற்றிகளுக்கு வழிநடத்தியதுடன், ஒன்பது இன்னிங்ஸ்களில் 333 ஓட்டங்களையும் விளாசினார். ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்ற சூர்யகுமார், இதுவரை ஒரு டி20 தொடரைக்கூட தோற்றதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை. அவர் இறுதியாக 2023 டிசம்பரில் இந்திய தேசிய அணிக்காக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










