நாட்டின் தெற்கு கடற்பரப்பில் பலநாள் மீன்பிடி படகு ஒன்றில் 654 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களில் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைதான 10 பேரும் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, ஐவரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனைய ஐவரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இலங்கை கடற்படையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 654 கிலோ கிராம் போதைப்பொருளுடன் 10 சந்தேக நபர்கள் ஆழ் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த போதைப்பொருள் தொகையுடன் கூடிய மீன்பிடி படகு கடந்த 12 ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, படகிலிருந்து போதைப்பொருள் அடங்கிய 48 பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொதிகளில்; 478 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 176 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி 10 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.










