இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய கடல் வலயத்துக்குள் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இந்த விவகாரத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயத்துக்குள் அல்லது அதற்கு அண்மையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்றார்.
சம்பவ இடத்துக்கு சென்ற இலங்கைக் கடற்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு காலி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுமார் 101 பேர் காணாமல் போயுள்ளதாக அல்லது காணாமல் போயிருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவித்தார்.அத்துடன், குறித்த கப்பல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அது விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டு அரபிக்கடலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கப்பலா, அல்லது இலங்கையை நோக்கி பயணித்த கப்பலா எனத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய வலயத்துக்குள் இத்தகைய தாக்குதல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பதை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.










