அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளில் தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில், மார்ச் மாதம் முதலாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. அபுல் ஹசன் அவர்களின் ஒருங்கிணைப்பில், பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
“விற்கின்றவர் – அடிமையானவர் அனைவருக்கும் அறிவித்தல்: அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் “போதை ஒழிப்பு” குறித்த ஒட்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருளின் ஆபத்துகள் குறித்து விளக்கமளிக்கும் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளைய தலைமுறையை உருவாக்குவதே இச்செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும். இவ்வாரம் முழுவதும் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்பதன் மூலம், நிந்தவூரை போதைப்பொருள் அற்ற பாதுகாப்பான சூழலாக மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











