அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்மைதானத்தில் நடைபெற்றது.அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன பங்கேற்றார்.
அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பைத் தொடர்ந்து பொலிஸ் பிரிவு வாகனங்களின் பேரணி இடம்பெற்றது. பின்னர் காலை முதல் மாலை வரை பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை நிலையங்கள், சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார நடைமுறைகள் மற்றும் பொலிஸ் நிலையத்தில் நிலவும் பௌதிக வள பற்றாக்குறை தொடர்பான விடயங்களும் பரிசீலிக்கப்பட்டன.இறுதியாக, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டல் வகுப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸார் பங்கேற்றனர்.












