ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில் நமீபியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்தியாவின் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக, ஆல்-ரௌண்டர் வோஷிங்டன் சுந்தர் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்ட காணொளியில், சுந்தர் “நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்ற புகழ்பெற்ற தமிழ் திரைப்பட வசனத்தைப் பயன்படுத்தி தனது மீள்வரவை உற்சாகமாக அறிவித்துள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது விலா எலும்பு மற்றும் பக்கவாட்டு தசை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சுந்தர் ஓய்வில் இருந்தார். இதனால் நியூசிலாந்து தொடரின் எஞ்சிய போட்டிகளிலும், ஐந்து டி20 போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.இந்நிலையில், காயத்திலிருந்து முழுமையாக மீண்டு அணியுடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக சுந்தர் தெரிவித்துள்ளார்.
தீவிரமான பயிற்சி அமர்வில் களத்தடுப்பு, பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டப் பயிற்சிகளில் நீண்ட நேரம் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பயிற்சியின் போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருடன் சுந்தர் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் மூலம் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடத் தயாராக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










