விஜய் ஹசாரே கிண்ண கிரிக்கெட் தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில், கேரளாவைச் சேர்ந்த 24 வயதான சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், களத்தடுப்பில் (Fielding) ஈடுபட்ட விக்னேஷ் புத்தூர் மொத்தம் 6 பிடியெடுப்புகளை (Catches) பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் உலக கிரிக்கெட் வரலாற்றில் லிஸ்ட் ஏ (List A) போட்டி ஒன்றில் 6 பிடியெடுப்புகளைச் செய்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதில் ஒரு பிடியெடுப்பு அவரது சொந்தப் பந்துவீச்சிலேயே பெறப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிக பிடியெடுப்புகளைச் நிகழ்த்திய சாதனையை தென்னாபிரிக்காவின் ஜாம்பவான் ஜொன்டி ரோட்ஸ் தன்வசம் வைத்திருந்தார்.
1993 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 5 பிடியெடுப்புகளை செய்திருந்தார்.மேலும் 2025 மே மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஹரி ப்ரூக் 5 பிடியெடுப்புகளைச் நிகழ்த்தியிருந்தார். அத்துடன் அரியன் சங்மா கடந்த ஜனவரி மாதம் சிக்கிம் அணிக்கு எதிராக 5 பிடியெடுப்புகளை பூர்த்தி செய்தார்.
குறித்த மூன்று வீரர்களினதும் சாதனைகளை 6 பிடியெடுப்புகள் மூலம் விக்னேஷ் புத்தூர் தற்போது தகர்த்தெறிந்துள்ளார்.இளம் சுழற்பந்து வீச்சாளரான விக்னேஷ் புத்தூர், முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற IPL 2026 ஏலத்தில், இவரை 30 இலட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி அவரை வாங்கியுள்ளது. தனது முதல் லிஸ்ட் ஏ போட்டியிலேயே இத்தகைய உலக சாதனை படைத்திருப்பது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரது மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.திரிபுரா அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் கேரளா அணி 145 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.










