ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் மிகவும் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அந்தக் கட்சியைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போது அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாகப் பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபால டி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு எனப் பிரிந்து செயற்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டது.
எனினும், தான்தான் கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்று தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டு வருகின்றார்.
விஜயதாச ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட நியமனத்தையும் அவர் சவாலுக்குட்படுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே தலைமைப் பதவியில் மாற்றத்தை வலியுறுத்தியுள்ளார் தயாசிறி ஜயசேகர எம்.பி.
“கிராமிய மட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விழுந்துள்ளது. தலைமைத்துவ மாற்றம் இன்றி அதனைக் கட்டியெழுப்ப முடியாது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைத் தனக்கு வழங்குமாறும் அவர் யோசனை முன்வைத்தார்.
தவிசாளர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவுக்கு வழங்க முடியும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.










