இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே உள்ள பிரம்மாண்ட சாதனைப் பட்டியலில் ரோகித் இணைய அதிக வாய்ப்பு உள்ளது.
ராய்ப்பூரில் இன்று நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில், அவர் இன்னும் 41 ஓட்டங்கள் எடுத்தால் வரலாற்று சாதனை படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ஓட்டங்களை கடந்த 4 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் 2025 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 561 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கூட 51 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசி நல்ல பார்மில் உள்ளார். அதற்கு முன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து இருந்தார். தான் விளையாடிய கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ஓட்டங்களை குவித்துள்ளார். 20,000 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைய அவருக்கு இன்னும் வெறும் 41 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ஓட்டங்களை கடந்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் – 34,357 ஓட்டங்கள்
விராட் கோலி – 27,808 ஓட்டங்கள்
ராகுல் டிராவிட் – 24,064 ஓட்டங்கள்
ராய்ப்பூரில் 41 ஓட்டங்கள் அடிக்கும் பட்சத்தில், இந்த ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்வார்.










