“துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும். கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உங்கள் அரசு கவிழ்க்கப்படும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்பப்படுகின்றது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் இன்று (21) நடைபெற்ற பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,”இந்த அரசு ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்தது.
இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஐ.எம்.எவ். உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவோம் என்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் ஐ.எம்.எவ்வுடன் இணைந்து கொண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சாதாரண மக்களது வாக்குகளை வேட்டையாடிய இந்த அரசு, ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமை அதிகரிப்பை கொடுத்துள்ளது.
மறுபக்கம் அரச ஊழியர்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது.
அரச ஊழியரகளை பழிவாங்கும் செயற்பாடுகளை தீவிரமாக இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.
தங்களுடைய அரசியல் தேவைக்காக அரச ஊழியர்களை பயன்படுத்திக் கொண்ட இந்த அரசு தற்போது அவர்களை கைவிட்டுள்ளது.
கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உங்கள் அரசு கவிழ்க்கப்படும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்” என்றார்.













