புத்தளம், வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
உந்துருளியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மகிழுந்தில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
மகிழுந்தில் பிரவேசித்தவர்கள் உந்துருளியில் பயணித்தவர்களை மகிழுந்தினால் மோதி விபத்துக்குள்ளாக்கினர். அதன்பின்னர், உந்துருளியில் பயணித்த இருவரைக் கூரிய ஆயுதத்தால் அவர்கள் தாக்கினர்.
இதன்போது காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார்.
மற்றைய நபர் மீது மகிழுந்தில் பிரவேசித்த இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உயிரிழந்தவர் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்காக வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிடச் சென்றவர் என்று தெரியவந்துள்ளது.
கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் உந்துருளியில் வீடு திரும்பியபோதே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ரிவோல்வர் ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














