கிண்ணியா நகரத்திற்கான கலாச்சார மண்டபம் மற்றும் சந்தை வளாகம் அமைப்பதற்கான சாத்தியம் குறித்தும் அவைகளை அமைப்பதற்கான காணிகள் குறித்தும் ஆராய்வதற்கும், அவற்றுக்கான திட்டங்களையும் திட்ட முன்மொழிவுகளையும் தயாரித்து தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்குமென கலந்துரையாடல் ஒன்று கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றது.
அதற்கு சாத்தியப்பாடான பல காணிகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. அக்காணிகளை ஞாயிறு மாலை 4:30 மணிக்கு கள விஜயம் செய்து பார்வையிட்டு சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்ப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு, அதற்காக 9 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.
இவ்வறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் கட்டடத்தின் தோற்றம் அதற்கான கட்டமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு முன் கொண்டு செல்வதெனவும் தீர்மானம் பெறப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, வலயக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம்.எம்.முனவ்வரா நளீம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர், கரையோர பாதுகாப்பு பணியக உத்தியோகத்தர், கட்டிடக் கலைஞர்கள், சுற்றுலாப் பணியக உறுப்பினர், வெடி மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டாளர், கலாச்சார உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர சபை செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











