மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணியில் ஏற்பட்ட தீயினை மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அருகிலிருந்த காணியில் தீச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் இந்த தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தீ விபத்து தொடர்பில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், புகையிரத நிலைய காவலர்கள் மற்றும் மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்கள் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கி வருகின்றனர்.
பெற்றோல் களஞ்சியங்கள் உள்ள காணிக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதனால் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் குறித்த பகுதியில் குவிந்துள்ளதை காணமுடிகின்றது.















