வவுனியா மத்தியஸ்த சபைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது.
வவுனியா மன்னார் மாவட்ட மத்தியஸ்தர் சபையின் பயிற்றுவிப்பாளர் செல்லத்துரை விமலல்ராஜ் தலைமையில் இன்றைய தினம் (26.06.2025) வவுனியா பிரதேச செயலக கேட்போா்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் கலந்து கொண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
புதிய தவிசாளராக திருமதி நந்தகுமார் சசிகலா நியமிக்கப்பட்டார். இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் பிரதாபன் கருத்து தெரிவிக்கையில், “வவுனியா பிரதேச செயலக மத்தியஸ்தர் சபைக்கு அதிகமான பிணக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டே இவ் மத்தியஸ்தர் சபை நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததார்.
காணி தொடர்பான பிணக்குகளே அதிகமாக காணப்படுவதாகவும், காணி தொடர்பான ஆவணங்கள் சரியாக காணப்படாமையால் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவான பிணக்குகள் தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றம் செல்ல முன்னர் மத்தியஸ்தர் சபைச் செயற்பாட்டை மக்கள் நாடுவதால் நடுநிலைமை மாறாத தன்மையை பேண வேண்டும் எனவும், அவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான அவர்கள் நலன் சாா்ந்த விடயங்களை கவனத்தில் கொண்டு இணக்கம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உரியது எனவும், பொருளாதார வலுவிழந்தவர்களையும் அவர்கள் தன்மையை விடுத்து விடயத்தை சரியான முறையில் அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்தியஸ்தர் சபை நியமனங்களை பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர், தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உட்பட 16 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கடந்த மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள், புதிதாக நியமனம் பெற்ற தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மத்தியஸ்தர் சபை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டனர்.














