மன்னார் – மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவணி இன்றைய தினம் (24) மாந்தை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி தலைமையில் மன். அடம்பன் பாடசாலையில் இருந்து பிரதேச செயலகம் ஊடாக நகர்ப்பகுதி வரை இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைத்தலுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் முகமாகவும், அதேநேரம் பாடசாலை சூழலில் புகைத்தலுடன் தொடர்புபட்ட பொருட்களின் விற்பனையை தடை செய்யும் முகமாகவும் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது.
‘புகைத்தல் அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த பேரணியில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் வீதிகளின் இருபுறங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பொது மக்களுக்கு புகைத்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அதே நேரம் அடம்பன் பாடசாலை சூழலில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் புகைத்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளையும் விற்பனை செய்வதற்கு எதிரான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விழிப்புணர்வு நடைபவனியில் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் ஊழியர்கள், மாந்தை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள், மன். அடம்பன் மகா வித்தியாலய அதிபர் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














