மாங்குளம், திருமுறுகண்டி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல் வைப்பு செய்ததுடன் மற்றும் காலாவதியான மற்றும் வண்டு மொய்த்த உணவு பொருட்கள் வைத்திருந்த வர்த்தகர்களுக்கெதிராக 66,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரிகளான Dr.பகீரதன் ,Dr .சஞ்சீவன் ஆகியோர்களின் ஆலோசனையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் உணவு கையாளும் நிலையங்கள், பூட் சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தொடர்ச்சியான முறையில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த 13.06.2025 ஆம் திகதி மாங்குளம் பொதுச் சுகாதார பரிசோதகர் ந.திருசன் அவர்களின் தலைமையில் முத்துஐயன்கட்டு பொதுச் சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர் டிலக்சன் உள்ளிட்ட குழுவினரால் மாங்குளம் மற்றும் திருமுறுகண்டி பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது சுகாதார குறைபாடுகளுடன் மற்றும் புழுப்பிடித்த, வண்டு மொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து மேற்படி பொருட்களை கைப்பற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய தினம் (23.06.2025) மாங்குளம் நீதவான் நீதிமன்றில் உணவகங்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள்.
வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான், உணவக உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்கண்டு மொத்தமாக 66,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன் திருமுறுகண்டி பகுதியில் உள்ள மூன்று கடைகளில் காணப்பட்ட சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரை கடைகளை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதோடு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.













