கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பைக் கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று (23) சந்தித்து தமது புத்தாக்கம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த லின்டன் ஜெனிஸ் அறோன் அஜேய் மற்றும் திருச்செல்வம் செர்வின் ஆகிய தரம் எட்டில் கற்கும் மாணவர்களே இதனை மேற்கொண்டனர்.
கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பை இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு பல்வேறுபட்ட வசதிகளை மேம்படுத்தி அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் சட்ட விதிமுறைகளுக்கு அமைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் கண்பார்வையற்றவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறன.
இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு தொடர்பில் கண் மருத்துவ சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர்.மு.மலரவன் தெரிவிக்கையில், “வவுனியா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய மாணவர்களின் கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு உதவத் தயார்” எனத் தெரிவித்தார்.
இயலாமைக்கு உள்ளானவர்களுக்கான தேசிய சபை அங்கத்தவர் வெ. சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், “கண்டுபிடிக்கப்பட்ட கருவியில் இன்னும் மேம்படுத்தவேண்டிய சிறிய செயற்பாடு உள்ளது என்றும், அதனை நிவர்த்தி செய்து பயன்பாட்டிற்கு வந்தால் விழிப்புலன் அற்றவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும்” எனக் கூறினார்.
இம் மாணவர்கள் இருவரையும் ஆளுநர் வாழ்த்தியதோடு இவ்வாறான புத்தாக்க கண்டுபிடிப்புகள் எமது மாணவர்கள் மத்தியில் இருந்து இன்னும் பல தோற்றம் பெறவேண்டும். அவை எமது மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததோடு, இம்மானவர்கள் மேலும் இதனை மேம்படுத்தி கண் பார்வை அற்றவர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்தார்.

