“தொடர்ந்தும் மீனவர்கள் சட்டவிரோத தொழில்களால் பாதிக்கப்படுவதாக” வடக்கு மீனவப் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று தனது இல்லத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “விவசாயிகளுக்கு பிரச்சினை எனில் குரல் கொடுக்கும் அவரசில்வாதிகள், அரச அதிகாரிகள் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படும் போது கண்டுகொள்ளாமலிருக்கின்றனர்.
தற்போது கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை மற்றும் கடலட்டை தொழில்கள் அதிகரித்துள்ளது. அதனை மீன்பிடி அமைச்சரோ, கடற்படையோ அல்லது நீரியல் வளத்துறையோ கண்டுகொள்வதில்லை.
முல்லைத்தீவில் கடற்படையினர் அதிகமான சட்டவிரோத தொழிலாளர்கள், எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கைது செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான சட்டவிரோத தொழில்கள் இடம் பெற்றுவருகிறது. அவற்றுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உரியவர்கள் உரிய கவனமெடுத்து மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.