விளக்கவுரை
எழுத்தாளர். ஆதன் குணா
என்னுடைய முதல் எழுத்துரு பதிப்பானது கவிதையில் இருந்தே தொடங்குகிறது. சிறு சிறு துளிகளாக வடித்து இந்த கவிதை நூலினை சிற்பமாக வடித்துள்ளேன். நீண்ட பயணத்தை இந்த கவிதை நூலில் இருந்தே ஆரம்பிக்கிறேன். பெரும்பாலான கவிஞர்கள் இயல்பனா பார்வையிலே கவிதைகளை கோர்ப்பார்கள். அவை உணர்ச்சிச்சிகளாக இருக்கலாம், உறவுகளாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், அரசியலாக இருக்கலாம், போராட்டமாக இருக்கலாம், சமூக விடுதலையாக இருக்கலாம், பெண்ணிய விடுதலையாக இருக்கலாம் ஆனால் என்னுடைய தொகுப்புக்களில் ஆங்காங்கே எல்லா விடயங்களையும் தொட்டுச் செல்கிறேன். இந்த எண்ணங்கள் என்னுள் வாசிப்பின் தாக்கத்தினாலேயே ஏற்பட்டது. சமூக மாற்றத்தின் பல விதைகளை இந்த நூலின் மூலமாக விதைக்க தொடங்குகிறேன்.
குழந்தை மனசு எனும் தலைப்பில்
“நீண்ட தூரம் வந்ததால்
இளைப்பாறுகிறது மழை
இளைப்பாறியதும் சென்றுவிடும் என்று
தெரியாத இலைகளின் மேல் “
சுயநலன் எனும் தலைப்பில்
“வற்றிய வயிற்றின்
பசியைத் தீர்க்க – வாசலில்
பணியாத கைகள்
உயிரற்ற சிலைகளின்
வயிற்றை நிறைக்க உயர்கிறது
கோவில் உண்டியல்களின் மேல்”
அழியும் இயற்கையின் இசை எனும் தலைப்பில்
“செல்களின் பாடல்கள்
காதைக் கிழித்ததால்
வண்டுகளின் பாடல்கள்
வழிந்து ஓடியது “
நான் எனும் தலைப்பில்
“அசைந்த என்னை
முக்கித் தள்ளினாள் அம்மா
பிதுங்கிய என்னை
போர்த்துத் தூக்கினார் அப்பா “
பிறப்பால் உயர்வு தாழ்வு எனும் தலைப்பில்
“ரத்தப் போர்வைக்குள் சுருண்டு படுத்து
மண் மெத்தையில் அழுது புரண்டு
கிடைத்த விரலைப் பிடித்து நடந்து
குட்டிக் குரலில் மழலை பேசி
குலம் தழைக்க குடம் உடைத்து
வெள்ளை மனமாய் ஈன்ற உன்னை
எந்தக்
கொள்ளையரடா மாற்றியது
உயர்வு தாழ்வு பார்க்க!”
வரலாற்றில் ஒருவனுக்காக எனும் தலைப்பில்
“ஓங்கிய கைகள்
துண்டாகிப் போனதப்பா
நிமிர்ந்த மார்புகள்
கிழிபட்டு சிதைந்ததப்பா
சிவந்த நீர்த் துளிகள்
ஆறாக ஓடினதப்பா
திசையின்றி திரிகிறது
பலி கொடுத்த இமைப்பா
முற்றுப்பெறா இலக்கு ஒன்று
தேங்கித்தான் கிடைக்குதப்பா
இறக்காத இறைவனை
எதிர்பார்த்துக் கிடக்குதப்பா “
போர் எனும் தலைப்பில்
“பிஞ்சுகளை நசுக்கினீர்கள்
பெண்களை புணர்ந்தீர்கள்
இழக்க இனி எதுவுமில்லை
இன
விடுதலைதான்
இறுதி எல்லை
வடிந்த உதிரத்தை
பூசிடுவாய் நெஞ்சினிலே
(அவன் ) கிழித்த ஆடையை
இறுக்கிடுவாய் இடுப்பினிலே
சிறுத்தையின் பாய்ச்சலாய்
பாய்ந்து விழு எதிரியிலே
ஏந்திய வாளை இறங்கி விடு
அவன் நெஞ்சினிலே
பொறுத்த காலம் இனி இல்லை
போர்தான் இதனெல்லை
நீ
அழித்த இனம் எமதென்று
அறளச் செய்
அவன் உயிர் நின்று “
தமிழர்களின் வாழ்வு முறை, சமயம், வாழ்வியல் போன்ற பலவற்றை நான் எழுதினாலும் சாதி, மதம், உரிமை, விடுதலை, முன்னோர்களின் தியாகங்கள் போன்ற மாற்றங்களின் எண்ணப்பாடுகளையே அதிகம் விரும்புபவனாகவும் அதில் மாற்றத்தினை எதிர்பார்ப்பவனாகவும் எனது எண்ண ஓட்டம் நீள்கிறது.
எனது இந்த கவிதை வரிகள் முடிவின்றி நீளும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.
நூல் :- நான்கு விரல்களுக்குள்
பேனாவின் யுத்தம்
எழுத்தாளர் :- ஆதன் குணா
விலை :- 500 ரூபாய்
விளக்கவுரை

