அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதனை சமாளிக்க பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு வேகமாக வளர உள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடக்கும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரஷ்ய பொருளாதார நிபுணர் எகடெரினா அரபோவா கூறியதாவது:
‛‛அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல நாடுகளுக்கு வரி விதிப்புகளை மேற்கொண்டு வருகிறார். இது நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர தூண்டுகிறது. இதனால் அமெரிக்காவின் நடவடிக்கையை சமாளிக்க பல நாடுகள் மாற்று வழியை யோசிக்க தொடங்கி உள்ளன. இதற்கு அமெரிக்கா கட்டவிழ்ந்த நிலையில் செயல்பட்டு வருவது தான் காரணம்.
இப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் 10 நாடுகள் உள்ளன. இன்னும் பல நாடுகள் இணையலாம். குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் வாய்ப்புள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைக்குள் வர உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஏனைய நாடுகள் இணைவதற்கு காரணம் யாதெனில் சர்வதேச வர்த்தகத்தில் டொலருக்கு பதிலாக பிரிக்ஸ் அமைப்பு புதிய நாணயப்புழக்கத்தைக் கொண்டு வருவது பற்றி ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பிரிக்ஸ் நாணயப்புழக்கம் வந்துவிட்டால் பலநாடுகள் அதனை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம். இதனால் அமெரிக்கா டொலரின் பயன்பாடு சரியும். டொலரின் மதிப்பும் உலகளவில் குறையும். இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் இந்த செயல்முறையை செயற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இது டொனால்ட் ட்ரம்புக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது..‛‛பிரிக்ஸ் புதிய நாணயப்புழக்கத்தைக் கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் அமெரிக்கா உடனான உறவை மறந்துவிட வேண்டும்” என்று பகிரங்கமாக ட்ரம்ப் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.