இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் – பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன் வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, சில பாதிகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 06:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை மாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதக்கப்படும்.
குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடிவதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை ஆகிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2009ம் ஆண்டு முப்படையினர் வசம் இருந்த 23,850.72 ஏக்கர் காணியில் 21,226.43 என்ன காணி விடுவிக்கப்பட்டு தற்போது படையினர் வசம் 2624.29 ஏக்கர் தனியார் காணிகளும் 951.52 ஏக்கர் அரசகாணிகளும் உள்ளதாகவும் அக்காணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பலாலி வீதி முழுமையாக மக்கள் பாவனைக்கு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஒரு தேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.





