யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் மழை நீரால் தடைப்பட்டிருந்த நிலையில் இன்று(1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டு நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாலம், மாரிக்காலப் பருவத்தில் நீர் நிரம்புவதால், கடந்த சில மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பாலம் அமைப்பதற்கு தடைகள் இருந்தபோதிலும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி மற்றும் நாகர்கோவில் மக்களின் முயற்சிகள் மூலம், வன ஜீவராசிகள் திணைக்களம் இணங்கியது.
நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான வீதி முடங்கி இருந்ததால், பொதுமக்கள் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் மாற்றுபாதை வழியாக பயணம் செய்தனர். இதனால், புதிய பாலம் அமைப்பது மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கடந்த நாட்களில் பெய்த கடும் மழையால் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பாலத்தை புனரமைக்கும் பணிகள் இன்று(1)மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

