காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும், 560 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் ஒப்பந்தத்தையும் மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிணைக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர்நிறுத்த திட்டங்களையும் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால், கூடுதல் இராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தபின் இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.
அந்தவகையில், சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன்படி, சிரியாவின் தெற்கே தேரா மாகாணத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதோடு, 19 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 2 ஏவுகணைகள் தாக்குதலில் ஈடுபட்டன என்றும் இதில், பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தற்போது அங்கு பதற்றமானதொரு சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.