இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாதியர்களின் பதவி உயர்வில் இழக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன் 12.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாகவும் தாதியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாதியர்கள் அமைச்சரே 2027 ஆண்டு சம்பளத்தில் கணக்கிடுவதென்று பொய் சொல்ல வேண்டாம், பழைய முறையில் பதவி உயர்வு என்றால் வரவு செலவு திட்டத்தில் போட்டது ஏன், அரசே தாதியருக்கு வரவு செலவு திட்டத்தில் சரியான நீதியை பெற்றுக்கொடு, வரவு செலவு திட்டத்தினை கொண்டு வந்தது சுகாதார ஊழியர்களை தாக்கவா? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தாதியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்கள் பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர நோயாளர் பிரிவு, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட தாதியர்கள் சேவைகளில் ஈடுபட்டிருந்தமையுடன் ஏனைய சேவைகளிலிருந்து 3 மணிநேரம் தாதியர்கள் விலகியிருந்தனர்.





