மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனையில் உள்ள காட்டு பகுதியில் இன்று சனிக்கிழமை (15) ஆண் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச மக்கள் காட்டு பகுதியில் ஆண் சிசு ஒன்று சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சந்திவெளி பொலிஸார் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த ஆண் சிசுவை பெற்றெடுத்த தாய், சிசுவை உரைப்பையில் கட்டி அதனை மொறக்கொட்டான்சேனை காட்டு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆண் சிசு சம்பவதினத்தன்று பிறந்துள்ளதாகவும் சிசுவின் தாயை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.