இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளித்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அலையும் மகளிர்களுக்கான புதிய அரசாங்கத்தின் பதிலென்ன என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளதுடன், மகளிர்விவகார அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு உரிய பதிலையும் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றில் இன்று (08.03.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை வன்னிப்பகுதி மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள பெண்தலமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை இழந்த சிறார்கள், மாற்றுத்திறனாளிச் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தினார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ அமைச்சர் அவர்களே இன்று மார்ச் – 08 பன்னாட்டு மகளிர்தினம் இந்த நிலையில் இறுதி யுத்தகாலத்தில் இராணுவத்திடம் பிள்ளைகளைக் கையளித்த தாய்மாரும், கணவர்களைக் கையளித்த மனைவியருமாக எமது வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடி 2923 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஒவ்வொரு மகளிர் தினத்தையும் துக்கநாளாக அறிவித்து பாரிய கனையீர்ப்பு ஆர்ப்பாட்டத்தைச் செய்ததைப்போல இந்த வருடமும் முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றினை நடாத்தி தமக்கான நீதியினைக் கோரியிருக்கின்றனர்.
இந்த மகளிர்களுக்கான பதில்தான் என்ன? இந்த பன்னாட்டு மகளிர் நாளில் புதிய அரசாங்கம் அந்த மகளிருக்கான நீதியை வழங்குமா? என்ற உத்தரவாதத்தை வழங்கவேண்டும்.
அன்றைய அரசின் வாக்குறுதிகளை நம்பி ஒப்படைக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது. தொடர் ஓலங்கள், அழுகுரல்கள், பலர் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இறந்தும் விட்டார்கள்.
இந்தநிலையில் நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடும் இவர்களுக்கு அடிக்கடி பொலிசார் நீதிமன்றத்தின் தடை உத்தரவு, பயங்கரவாத் தடுப்புப்பிரிவினரால் விசாரணைகள், வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மிரட்டுவது, மறைமுகத் தாக்குதல்கள், உயிர் அச்சுறுத்தல், போராட்டங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சிகள், இப்படியான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2009ற்கு பின்னர் பலபெயர்களில் கொண்டுவரப்பட்ட பொறிமுறைகளில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், இவைகளை நம்பி தாம் ஏமாந்ததுதான் மிச்சம் எனப் புலம்புகின்றார்கள். புதிய அரசானது இந்த விடயத்தில் உண்மைத் தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும். கடந்தகால அரசுகள் இவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. புதிய அரசு பதில் சொல்லவேண்டும். இந்தக் குறைகளை நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கும் இந்த மகளிர்களை நீங்கள் சந்திக்க வேண்டும். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும். தீர்வுக்கான முயற்சிகளில் நீங்களும் இறங்க வேண்டும். அவர்களின் துன்பங்களில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் அமைச்சர்அவர்களே.
அதேவேளை பெண்தலைமைத்துவக் குடும்பங்களாக மிகப்பெரிய தொகையினர் காணப்படுகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் சுமார் 92000 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றது. இவர்கள் சமூகத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். தமது வாழ்வாதாரத்துக்காக பெரிதும் சிரமப்படுகின்றார்கள். மிகவும் குறைந்தளவிலான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் ஓரளவிற்கு வருமானத்தை ஈடுசெய்தாலும், மிகுதி பெரும்பாலான குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்காக பெரிதும் இடர்படுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு பிரதேச ரீதியான பெண்தலைமைத்துவ குடும்பங்களின் புள்ளிவிபரங்களைப் பார்ப்போமானால், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 2617 பெண்தலைமைத்துவக் குடும்பங்களும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 2121 பெண்தலைமைத்துவக் குடும்பங்களும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 1941 குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 890 குடும்பங்களும், துணுக்காய் 813 குடும்பங்களும், மணலாறு 681குடும்பங்களுமாக மொத்தமாக 9063 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றன.
இதேபோன்று வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பகுதிகளிலும், வடக்கு, கிழக்கிலும் 92000 பெண் தலைமைதத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.
தயவு செய்து பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு மாதாந்த வருவாய் ஈட்டக்கூடிய வகையில் உதவிகளைச் செய்யுங்கள். தங்களுடைய குடும்பங்களை சீராக கொண்டு செல்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றார்கள். குடும்பச்சுமை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலைமை, பாதுகாப்பின்மை, அன்றாட வாழ்வாதாரப் பாதிப்பு, உளரீதியான பாதிப்புகள், பிள்ளைகளின் கல்விப் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, பாலியல் ரீதியான பாதிப்புகள், சமூகத்தினால் ஓரங்கட்டப்படுதல், தாழ்வுமனப்பான்மை, நுண்நிதிக்கடன் நிறுவனங்களுக்கு அடிமையாகுதல் உள்ளிட்ட சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்கள் சிலர் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.
எனவே பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய வகையில் இவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
கூடுதலாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலுள்ள சிறார்கள்தான் பெரும்பாலும் பாடசாலை இடைவிலகல் நிலைமைக்கு உள்ளாகின்றனர். இக்குடும்பங்களின் பொருளாதாரத்தில் சிறுமாற்றங்களையாவது மகளிர் அமைச்சும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவர்களாக 390 பேர் காணப்படுகின்றார்கள். தாயை இழந்தவர்களாக 514 சிறுவர்களும், தந்தையை இழந்த சிறுவர்களாக 2263 பேரும் காணப்படுகின்றார்கள். அதேவேளை மாற்றுத்திறனாளிகளாக உள்ள சிறுவர்களாக 292 பேர் காணப்படுகின்றார்கள்.
அத்தோடு பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்களாக குடும்பத்தின் சுமைகளை இந்தச் சிறுவர்களே தாங்கவேண்டிய நிலமைகளும் காணப்படுகின்றன. இதனால் தற்போது சிறுவர்களின் பாடசாலை இடைவிலகல் கூடுதலாக காணப்படுகின்றது.
கெளரவ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்களே, கௌரவ பிரதமர் அவர்களே நீங்கள் பெண்மணிகள், அரசாங்கம் தகுதியான இடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமித்திருக்கின்றது. உங்களுக்கு நாம் வரிவாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்றில்லை. முல்லைத்தீவு யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். பொருளாதார ரீதியாக பலம் குறைந்த மாவட்டமுமாகும்.
முல்லைத்தீவில் மகளிர் தினத்திலேயே கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது. தங்களுக்கு இருக்கும் குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கே போராடுகின்றார்கள். மகளிர் தினத்திலேயே போராடுகின்றார்கள்.
கௌரவ மகளிர் அமைச்சர் அவர்களே, முல்லைத்தீவிற்கு வாருங்கள். நீங்கள் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் அவர்களின் வேதனைகளுக்கு சிறிய அளவிலான மருந்தாக அமையலாம்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்நிலுள்ள மாற்றுத் திறனாளிகள் தொடர்பிலான ஒரு தரவினை இங்கே குறிப்பிடலாமென நினைக்கின்றேன். எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்டளவு மாற்றுத்தினாளிகள் உள்ளனர். புதுக்குடியிருப்பில் 943 பேர், கரைதுறைபற்று 851பேர், ஒட்டுசுட்டான் 625 பேர், துணுக்காய் 319 பேர், மாந்தை கிழக்கு 275 பேர், மணலாறு 145 பேர் உள்ளடங்கலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 3158 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் அவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் – என்றார்.