சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என கருதுகின்றீர்களா? என இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் நிகழ்ந்த பாரிய மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்த கலும் மக்ரே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.
அல்ஜசீரா பேட்டியின் போது ஹமாசை அழிப்பதற்கான ராஜபக்சமாதிரி குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
காசாவில் யுத்தம் ஆரம்பித்து ஒரு மாதத்தின் பின்னர் அமெரிக்காவின் புத்திஜீவிகள் அமைப்பொன்று ஹமாசினை முற்றாக அழிப்பதற்கான ராஜபக்ச திட்டம் என கட்டுரையொன்றை வெளியிட்டது. இஸ்ரேல் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய தந்திரோபாயத்தை பயன்படுத்த வேண்டும் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் குறிப்பிட்ட மூலோபாயம் என்பது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை, யுத்தசூன்ய வலயம் என அழைக்கப்படும் பகுதியை நோக்கி செல்லவைத்து அதன் பின்னர் அவர்கள் மீது குண்டுவீசுவதாகும்.
ராஜபக்சாக்கள் செய்ததை இஸ்ரேல் செய்யவேண்டும், என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டதுடன் இஸ்ரேல் எந்த வகையான சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலிற்கும் உடன்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது, அவ்வாறு சர்வதேச சட்டங்களை புறக்கணிப்பதை நியாயப்படுத்தும் அதன் விளைவுகளை நியாயப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை காசாவில் பார்க்கவேண்டியுள்ளது என்பது குறித்து நீங்கள் கவலையடைகின்றீர்களா? என கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க நான் அந்த கட்டுரையை படிக்கவில்லை ஆகவே அதில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது இதனால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த மெஹ்டி ஹசன் இஸ்ரேலை ஆதரிக்கும் சிலர் யுத்தகுற்றங்கள் மருத்துவமனைகள் மீதுதாக்குதலை மேற்கொள்வது போன்ற ராஜபக்ச பாணியை பின்பற்றவேண்டும் என கருதுகின்றார்களே என கேள்வி எழுப்பினார்.
மருத்துவமனைகள் மீதுதாக்குதல்கள் இடம்பெறவில்லை என இதற்கு பதிலளிக்க ஆரம்பித்தவேளை பார்வையாளர்கள் மத்தியிலிருந்து குரல்கள் எழுந்தன.
அதற்கு ரணில் எனது பதிலை முடிக்க விடுகின்றீர்களா? என தெரிவித்துவிட்டு முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே முக்கியமானது, வேறு சில சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனைகள் மீது விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் பாரியளவில், பெருமளவில் இது இடம்பெற்றது என நான் தெரிவிக்கமாட்டேன்.
மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளகூடாது என வலியுறுத்தியவன் நான் அதனை நாங்கள் உறுதி செய்தோம்.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்றால் ஆம் அங்கு பிரச்சினைகள் உள்ளது அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன், நான் இல்லை என தெரிவிக்கமாட்டேன். என குறிப்பிட்டார்.