யாழ்ப்பாண மாவட்ட செயலரர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகா ரக மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
விபத்தில் வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலரின் மகன் ஆதி என்பவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் , சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன் , அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்குப்பட்டமையால் , சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வாகனம் மாவட்ட செயலரின் உத்தியோக பூர்வ வாகனம் எனவும் , அதனை சாரதி இன்றி மாவட்ட செயலரின் மகனே செலுத்தி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.




