புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள், சமூகப் பணியாளர்கள், கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை அலுவலகத்தில் நேற்றையதினம் (19.02.2025) இடம்பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தின் தலைவர் ஜூட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற குறித்த கௌரவிப்பு நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வற்றாப்பளை , கேப்பாபிலவு பாடசாலை மாணவர்கள் 7 பேர், 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 27 மாணவர்கள், மற்றும் நடனத்துறையில் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற காரணமாக இருந்த நடன ஆசிரியர் க.ஜஸ்மினி அவர்களுக்கும், இடமாற்றம் பெற்று சென்ற கிராம அலுவலர் ஜேசுரட்ணம், புதிதாக கிராம அலுவலராக பதவியேற்ற அஜித்திரா, சஜாத் மற்றும் வற்றாப்பளை கிராம அலுவலராக நியமிக்கப்பட்ட கரிகாலன் அவர்களுக்கும் மற்றும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு உதவிகள் புரிந்தவர்களும் நேற்றையதினம் மாலை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சந்நதியார் ஆச்சிரம குருக்கள் மோகனதாஸ் சுவாமிகள், சிறப்பு விருந்தினராக வற்றாப்பளை பாடசாலை அதிபர் க.திருக்குமரன், கிராம அலுவலர் கரிகாலன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர், தாய்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ரூபன், உதயசூரியன் முன்பள்ளி ஆசிரியர்கள், சமூக தொண்டர்கள், மகளிர் அமைப்பு குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வானது பாரம்பரிய நிகழ்வான சிலம்பாட்டத்துடன் ஆரம்பமாகி வற்றாப்பளை பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி நிகழ்வின் கதாநாயகர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


