‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் கொள்கை அறிக்கையின் பிரகாரம் ‘தூய்மையான இலங்கை’ வேலைத் திட்டத்தின் ஊடாக 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிமுகப்படுத்தல் விழிப்புணர்வுக் கூட்டமானது நேற்று (11) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்ற நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்று வருகின்ற முக்கிய கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாது இரகசியமான முறையில் பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊடகங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் பிராந்திய ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



