கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பிரதான நுழைவாயில் இன்று(10) திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நான்கு மில்லியன் ரூபா செலவில் குறித்த நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த நுழைவு வளைவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த நுழைவாயிலினை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்திருப்பது உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியது. அப்பாவி மாணவன் குழந்தையாக இருக்கின்றபோது பிஸ்கட் கொடுத்து அவரை மிக அருகில் வைத்து சுட்டுக்கொன்றார்களோ அதனை சிந்திக்காத மகிந்தவின் குடும்பம் இப்பொழுதாவது மகிந்தராஜபக்சவின் வாயால் அதனை ஒரு கனதியான வேதனையாக வெளிப்படுத்தியிருப்பதை மிக அவதானத்துடன் பார்க்கிறோம்.
இந்த மண்ணில் மிகப்பெரிய மனிதப் பேரவலங்களை நடாத்துவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன்.
ஜனாதிபதியாக அவர் இருந்த காலகட்டத்தில் யுத்தம் முடிந்த போது இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தீர்க்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார். அவருக்கு சிங்கள மக்களின் அதிகமான ஆதரவு இருந்தது. இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும். வரலாற்றில் பிழைவிட்ட தலைவராக வாழ்கின்றார். அவர் இப்பொழுதாவது உணர தலைப்பட்டிருப்பது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பார்க்கிறோம். என தெரிவித்தார்.




