“நாம் எந்தத் தவறும் இழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை. எனவே, அரசின் கைது நடவடிக்கையால் நாம் அஞ்சப்போவதில்லை.”
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்டவிரோதமாகச் சொத்து குவித்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ (நாமல் ராஜபக்ஷவின் சகோதரர்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் கைது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சனிக்கிழமையன்றுகூட பொலிஸார் தற்போது தீயாக வேலை செய்கின்றனர் போலும். நல்லது. எம்மைக் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை, பாதாளக் குழுக்களை ஒடுக்குவதிலும் பொலிஸார் காட்ட வேண்டும். மாறாக அரசியல் தேவைகளுக்காகச் சட்டத்தை அமுல்படுத்த முற்படக்கூடாது.
அநுர அரசு அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது. நல்லாட்சிக் காலத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயலாளராக இருந்தவரே தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார்.
தமது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே அவ்வப்போது கைதுகள் இடம்பெறுகின்றன.
நாம் எந்தத் தவறும் இழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை. எனவே, அரசின் கைது நடவடிக்கையால் நாம் அஞ்சப்போவதில்லை. நீதிமன்றத்தை நம்புகின்றோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய பிரசாரம் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.” – என்றார்.