இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மக்களுக்கென உவந்தளிக்கப்பட்ட கட்டடத் தொகுதியின் பெயர் இன்று காலை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” என்று வழங்கப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி முதல் “திருவள்ளுவர் கலாசார மையம்” எனப் பெயர் மாற்றப்பட்ட இந்திய அரசாங்க நன்னொடையான கட்டடத் தொகுதி இன்று மீண்டும் “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார காலமாகப் பேசுபொருளாக மாறியிருந்த பெயர் மாற்ற சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
கடந்த 18 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் என்று பயன்படுத்தப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கையின் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலவல்கள் பிரதி அமைச்சர் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் ஆகியோரின் முன்னிலையில் “திருவள்ளுவர் கலாசார மையம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்தப் பெயர் மாற்றம பலத்த விமர்சனத்துக்குள்ளாகியது. அரசியல்வாதிகள் உட்படப் பலர் இதற்கு எதிராகக் கருத்துக்களை முன் வைத்தனர். சமூக ஊடகங்களில் பலமான எதிர்ப்புகள் பல பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், திருவள்ளுவர் கலாசார மையத்தின் முன் நுழைவாயிலில் இன்று காலை “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” எனப் பெயரிடப்பட்டு, புதிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.