இலவசக் கல்வியை கேள்விக்குட்படுத்தும் வகையில் பாடசாலைக்குள், ஆடம்பர கற்றல் உபகரணங்கள் நுழைவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.
நேற்றையதினம் (23) நொதேன் விளையாட்டு கல்லூரியின் இயக்குனர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற, மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்ற போதும் ஒரே சீருடை நடைமுறையில் இருக்கின்றபோதும் மாணவர்களின் சமத்துவத்தை சீரழிக்கும் வகையில் ஆடம்பர கற்றல் உபகரணங்கள் பாடசாலைக்குள் நுழைகின்றன. இது பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்களை பாதிப்பதுடன் பாடசாலைகளில் இருந்து இடைவிலகவும் காரணமாக அமைகின்றது.
எனவே புத்தகபை, தண்ணீர் போத்தல், உணவுப்பெட்டி, எழுதுகருவி என்பன ஆடம்பரமானதாகவும் விலை அதிகமுள்ளதாகவும் விற்பனை செய்யப்படுவதுடன் அவை பாடசாலைக்குள் நுழைந்தபின் மாணவர்களின் மனங்களை மாற்றத்திற்கு உட்படுத்தி ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணுகின்றது.
இதன்மூலம் சமத்துவம் பாதிக்கப்பட்டு கல்வியும் வீழ்ச்சியடைந்து, பெற்றோர்கள், பிள்ளைகளுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து கல்வியில் இருந்து இடைவிலக வைக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆடம்பர கற்றல் உபகரணங்களுக்கு தடைவிதித்து பாடசாலையில் மாணவர்களுக்கு இடையிலான சமத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
