முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. அந்தக் குழந்தையின் தந்தையும், தாயும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மொனராகலை மாவட்டம், செவனகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத்தினர் பயணித்த ஓட்டோ ஒன்று வேகக் கடுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது ஓட்டோவில் பயணித்த ஒரு வயது ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
ஓட்டோவைச் செலுத்திச் சென்ற குழந்தையின் தந்தையும் (வயது 36), ஓட்டோவின் பின் ஆசனத்தில் குழந்தையை மடியில் வைத்திருந்த தாயும் (வயது 28) படுகாயங்களுடன் செவனகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.