அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கவுள்ள நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களை பீப்பிள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏஷியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றன.
வொஷிங்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
“நாங்கள் முன்கூட்டியே சர்வாதிகாரத்திற்கு கீழ்ப்படியவில்லை, பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம்” என்று பீப்பிள்ஸ் மார்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பெண்கள் உரிமை, சமத்துவம், குடியேற்றம் போன்ற அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப்பை எதிர்க்கும் வகையிலான போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் போரட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். டிரம்புக்கு ஆதரவளிக்கும் டெஸ்லா நிறுனவர் எலோன் மஸ்க் உட்பட அவருக்கு நெருங்கியவர்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த போராட்டமானது நியூயோர்க், சியாட்டில் மற்றும் சிக்காக்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
நாளை டிரம்ப் பதவியேற்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.டிரம்ப் முதல்முறையாக பதவியேற்ற 2017 ஜனவரியிலும் இதே அமைப்பினர் இதேபோன்றதொரு போராட்டத்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.