01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தலைமையிலான கலந்துரையாடலில் இணக்கம் வெளியிட்டனர்.
இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து இணைந்த நேர அட்டவணையின் கீழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார்.
போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17.01.2025) இடம்பெற்றது.
இலங்கையில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இலங்கை போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் இணைந்து ஒரே இடங்களிலிருந்து சேவைகளை நடத்திவருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், வடக்கு மாகாணத்திலும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்காக பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை பலனளிக்கவில்லை எனத் தெரிவித்தார். இனிமேலும் அவ்வாறு ஒருங்கிணைந்த சேவையை நடத்தாமல் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இதற்கு இரு தரப்பும் இணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண மக்களுக்காகவே சேவையாற்றுகின்றீர்கள் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்தச் சேவையை வழங்கும் நீங்களும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே என்பதை நினைவிலிருத்தி, விட்டுக்கொடுப்புக்களுடன் இணக்கத்துக்கு வருமாறும் கோரினார்.
இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தினால் ஒருங்கிணைந்த சேவைக்கு தயாராக இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைவாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இணைந்த நேர அட்டவணையை வர்த்தமானியில் குறிப்பிட்டவாறு நடைமுறைப்படுத்துவது என்றும், முதல் கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது.
இதன் பின்னர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் தொடர்பிலும், வாகன தரிப்பிட வசதிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மின்சார நிலைய வீதியில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு பின்புறமாகவுள்ள பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் காணப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது.
சட்டத்துக்கு முரணாக அந்தப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆளுநர், யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களை அகற்ற மாநகர சபையை நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணித்த நிலையில், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு முன்பாகவுள்ள காணிக்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளை நகர்த்துவதன் மூலம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வாகன தரிப்பிடமாகப் பயன்படுத்த முடியும் என்ற யோசனை இலங்கை போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய முகாமையாளர் கே.கேதீசனால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான குளிரூட்ட பேருந்துச் சேவையின் அவசியம் தொடர்பில் ஆளுநர் வலியுறுத்தினார். ஏற்கனவே வழித்தட அனுமதி பெற்ற தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கே அந்தச் சேவைகளை வழங்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டதுடன், இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடி முடிவை தெரிவிப்பதாக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
யாழ். நகரப் பகுதியில் சில இடங்களில் பேருந்து தரிப்பிடங்கள் இல்லாமையால் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இலங்கை போக்குவரத்துச் சபையினர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்ததுடன், சில இடங்களில் பேருந்து தரிப்பிடங்களுக்கு நெருக்கமாக வீதியோர வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் நெருக்கடி நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார். அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகர ஆணையாளரை ஆளுநர் பணித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் முகாமையாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் டிப்போ முகாமையாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வடக்கிலுள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணப் பிராந்திய எஸ்.எஸ்.பி., யாழ்ப்பாணப் பிரிவு போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.