மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாடுகள் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
அவ்வாறு இல்லாவிட்டால், மின் கட்டண குறைப்பைக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நேரிடுமென்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
அதற்கமைய, கடந்த சில நாட்களாக பொதுப்பயன்பாடுகள் அதிகார சபை ஒன்பது மாகாணங்களிலும் பொதுமக்களிடம் கருத்துக் கணிப்புகளை நடத்தியிருந்தது. அதன்போது, பிரதானமாக மின் கட்டணத்தை 20 – 35 சதவீதத்துக்கு இடையில் குறைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சகலரும் ஒன்றுபட்டிருந்தார்கள் என்று மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அத்துல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
‘‘மக்களின் யோசனைகளுக்கு மதிப்பளித்து 35 சதவீத மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மின் கட்டணத்தை 36 வீதத்தால் உயர்த்துமாறு கூறியதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது. மின்சார சபை நூற்றுக்கு ஒரு வீதம் என்று கூறுகிறது என்றால் அதனை கேட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடவும் கூடாது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீன நிறுவனமாகும்.
அதேபோன்று எரிபொருள் விலை மின் கட்டணத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக விலையிலேயே எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருளை விநியோகித்து வருகிறது. டீசல், நெப்தா போன்றவற்றை அதிக விலைக்கே விநியோகிக்கிறது. இதனூடாக எரிபொருள் கூட்டுத்தாபனம் அதிக இலாபத்தையும் அடைகிறது. குறைந்தபட்ச செலவில் எரிபொருளை பெற்றுக்கொடுத்தால் மின்சார சபையினால் அதிக இலாபத்தை அடைய முடியும்’’ என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, 17ஆம் திகதி மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. வரலாற்றில் அதிக வீதத்தில் மின் கட்டணம் குறைக்கப் படவேண்டும். கடந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வரி முறையை அவ்வாறே முன்னெடுத்து மக்களின் பணத்தை சூறையாடும் நடவடிக்கையை கிளீன் ஸ்ரீ லங்கா என்று கூறுகிறார்கள். இதற்கு அப்பால் மின் கட்டணத்தை குறைப்பதே இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகும் என்று ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
‘‘எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இரண்டு முறைகளின் அடிப்படையில் 33 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் மின் கட்டணத்தை குறைக்க முடியும். ஒரு வருடத்துக்குமேல் மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தின் அடிப்படையிலும் ஊழல் நிறைந்த எரிபொருள் விலை சூத்திரத்தை திருத்தி அதனை மின்சார சபைக்கு வழங்குவதனூடாகவும் மின்கட்டணத்தை குறைக்க முடியும். காரணம் தற்போது எரிபொருள் கூட்டுத்தாபனத்தால் மின்சார சபைக்கு வழங்கப்படும் எரிபொருள் குறைந்த விலையிலேயே வழங்கப்படுகிறது.
எனவே, இந்த முறையினூடாக நாளையிலிருந்து மின் கட்டணத்தை நிச்சயமாக 35 சதவீதத்தால் குறைக்க முடியும். இதனை சூறையாடுவதற்கான உரி மை அநுர ஹரிணி அரசாங்கத்துக்கு இல்லை. தற்போது நடைமுறையிலுள்ள மின்கட்டண சூத்திரத்தை திருத்தியமைக்க வேண்டும். அவ்வாறு 35 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு எதிராக ஒன்றுதிரள நேரிடும். மக்களையும் ஒன்றுதிரட்ட நேரிடும்’’ என்றார்.