தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு யாழ்.உடுப்பிட்டியில் பட்டப் போட்டி நிகழ்வு வெகு விமரிசையாக இடம்பெற்றுள்ளது.
தைப் பொங்கல் தினமான இன்று காலை 11 மணியளவில் குறித்த போட்டி இடம்பெற்றது.
இப் பிரதேசத்தின் இளைஞர்களினால் பல வர்ணங்களில் பருந்துப் பட்டங்கள் ஏற்ற விடப்பட்டிருந்தன.
குறித்த பட்டங்களில் உயரமாக விடப்பட்ட பட்டங்களிற்கு நடுவர்களினால் தீர்ப்பளிக்கப்பட்டு பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. முதல் பட்டத்திற்கு 10,000 ரூபா பரிசும் , இரண்டாம் பட்டத்திற்கு 7000 ரூபா பரிசும், மூன்றாம் இட படத்திற்கு 5000 ரூபா பரிசும் வழங்கப்பட்டன. அத்தோடு ஆறுதல் பரிசும் 2000 ரூபா வழங்கப்பட்டது. அதில் முதல் இடத்தினை குறித்த பிரதேசத்தினை சேர்ந்த க. துசனந்த் பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடத்தினை சி.உஷாந்தன், மற்றும் மூன்றாம் இடத்தினை மிதுஷன் பெற்றுக் கொண்டார்.
உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் குறித்த பட்டப் போட்டிகள் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்றது.
வெளிநாடு வாழ் உடுப்பிட்டி நபரான திரு. நடராசா நந்தகுமார் அனுசரணையில் வருடம் தோறும் நடைபெறும் குறித்த பட்டப் போட்டி நிகழ்வில் இளைஞர்கள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வினை பார்வையிடுவதற்காக குறித்த பிரதேசத்தின் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உடுப்பிட்டி பிரதேசத்தில் இரண்டு நூற்றாண்டு கடந்தும் குறித்த பட்டப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.