“இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை.” – என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
“இங்கு இன, மத வன்முறைகளை மீண்டும் தூண்ட முயல்வோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுவார்கள்.” – என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அப்படியானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனையை தேசிய மக்கள் சக்தி அரசு வரவேற்கும்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.