ஹட்டனில் இருந்து மஸ்கெலியா- சாமிமலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் குறுக்கே சென்று பஸ்ஸின் சாரதியை தாக்கிய நான்கு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.பி.ராஜநாயக்க தெரிவித்தார்.
இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொண்ட குழுவொன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 5 மணியளவில் ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பஸ்ஸைப் பின்தொடர்ந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பஸ்ஸைக் கடந்து சென்று வீதியின் குறுக்கே நிறுத்தி, சாரதியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி தனியார் பஸ்ஸுடன், திங்கட்கிழமை (06) மோதியதற்கே பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .
முச்சக்கர வண்டியொன்றும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றுமொரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான சாரதி டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20-25 வயதுடைய ஹட்டன் –டிக்கோயாவை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், சந்தேகநபர்கள் சாரதியை தாக்கும் வீடியோவை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதுடன், சந்தேக நபர்கள் அந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டாம் என குறித்த நபரையும் அச்சுறுத்தியது தெரிய வந்துள்ளது.