நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சையைப் பெற்றுக்கொண்டுள்ள ஒருசில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமையால் பாதிப்புற்றவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காக தொழிநுட்பக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழுவால் குறித்த விடயங்களை ஆராய்ந்து செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றி விதந் துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விதந்துரைகளின் அடிப்படையில் அந்த சம்பவத்தால் பாதிப்புக்குள்ளாகிய 17 நோயாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :
- 12 நோயளர்களுக்கு 1,000,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.
- 02 நோயாளர்களுக்கு 750,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.
- ஒரு நோயாளிக்கு 700,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.
- 02 நோயாளர்களுக்கு 250,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.