‘மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரச உத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு அவர்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும் ‘ என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(03) வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கி இருக்கிறார்கள். அதை சரியான முறையில் முன்னெடுத்து. மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மன்னாரில் இடம்பெற்ற நில மோசடி, இட மோசடி தொடர்பில் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சினைகள் என்று பார்க்கும் இடத்தில், கடந்த 15 வருடங்களுக்கு மேற்பட்ட பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இதனை எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும்.
சிங்கள ,தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள்.
அதை விட நாட்டின் பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து வைப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு தேவை.”என அவர் தெரிவித்தார்.