யாழ்ப்பாணம், காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 290 மில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு உட்பட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் சீனோர் நிறுவனம் (Cey-Nor Foundation Ltd), காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்கான திட்டத்தை 290 மில்லியன் ரூபா (29 கோடி ரூபா) செலவில் முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இந்தியாவுக்கான இலங்கையின் அப்போதைய உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தனர்.
சிவில் பணிகள் மற்றும் தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள் சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமையவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யாழ். காரைநகர் இறங்குதுறை முழுமையாக புனரமைக்கப்பட்டதன் பின்னர் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதுடன், படகு கட்டும் தளத்தைச் சுற்றியுள்ள சிறிய நிறுவனங்கள் அபிவிருத்தியடைவதன் மூலம் அப்பகுதியில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். அத்தோடு தரமான மீன்பிடி உபகரணங்களின் விநியோகமும் அதிகரிக்கும்.
இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக 05 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 500 கோடி டொலர்) மேலான இந்தியாவின் நிதி ஒத்துழைப்பிலான புரிந்துணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அபிவிருத்தி உதவி முயற்சிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலுமுள்ள இலங்கை மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.