கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக திரு வினாசித்தம்பி சிவனேசன் பாடசாலை அதிபராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தவறாக வழி நடத்தி கொட்டடி சமூகத்தை ஏமாற்றி மிக மோசமான ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை சமூகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பாடசாலை சமூகத்தை ஏமாற்றி ஊழல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த அதிபர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளாகிய நாம் கௌரவ ஆளுநருக்கு 27ஃ12ஃ2022இல் எழுத்து மூலம் அறிக்கையிட்டிருந்தோம். அதன் பிரதிகள் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.
எனினும் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் எமது கோரிக்கை முறையான விதத்தில் விசாரிக்கப்பட்டு நியாயமான தீர்வு இன்று வரை வழங்கப்படவில்லை.
அதிபர் தொடர்பாக நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
இப்பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு சமைத்த உணவையே பெற்று கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும் இலைக்கஞ்சியே தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி முறைப்பாடு செய்த பெற்றோர்கள் அதிபரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் உணவு கணக்கை பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்று சென்ற பின்னரும் பிரதி அதிபரே தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்உணவு கணக்கு தொடர்பாக ஆசிரியர்கள் கேள்வியெழுப்பியமையால் குறித்த உணவு கணக்கு அறிக்கை அதிபரால் காணாமலாக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச செயலகத்தினாலும் பனை அபிவிருத்தி சபையினாலும் பால் வழங்கப்பட்டு வந்துள்ளது. குறித்த ஒரு நாளில் பாடசாலை ஆசிரியர் கடையிலிருந்து 10 லீற்றர் பாலை பெற்றுக் கொள்வதற்காக சென்றபோது 5 லீற்றர் பால் வேறொருவரால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை வெளிப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான செயலட்டைகளை போட்டோ கொப்பி எடுப்பதற்கு ரோணர் முடிந்துவிட்டதென தொடர்ச்சியாக கூறி வந்த அதிபர், வருட இறுதியில் பாடசாலையின் கொள்வனவு குழு மதிப்பீட்டுக் குழுக்களின் சிபாரிசு இல்லாமலே ரோணரை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்து அந்த படிவங்களில் கையொப்பம் இடும்படி ஆசிரியர்களை வற்புறுத்தியுள்ளார். ரோணருக்கான பற்றுச் சீட்டு வவுச்சர் என்பவற்றின் திகதிகள் முரண்பாடாக உள்ளன.
இதுவரை காலமும் பாடசாலை கணக்குகளில் மாற்றபடாத காசோலை பயன்படுத்தப்படாது தொடர்ச்சியாக சாதாரண காசோலையே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
2022இல் ஆங்கில பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பாடசாலை தரிசிப்புக்கு வந்த சந்தர்ப்பத்தில் பாடசாலையில் ஆங்கிலபாடம் கற்பிக்கின்ற தாய்மை அடைந்த நிலையிலிருந்தபெண் ஆசிரியரை மலசல கூடத்தில் வைத்து அதிபர் பூட்டியுள்ளார். நீண்ட நேரத்தின்பின் ஆசிரியரின் அலறல் சத்தம்கேட்டு ஏனைய ஆசிரியர்கள் வலய கல்விப் பணிமனைக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டு குறித்த ஆசிரியர் மயங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டார் மறுநாள் அப்போது வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த திரு மாணிக்கராசா அவர்கள் விசாரணை என்ற பெயரில் ஆசிரியர்களை சமாதானம் செய்து விடயத்தை வெளியே தெரியாது மூடி மறைத்து அதிபரை காப்பாற்றியுள்ளார். மன உளைச்சலுக்கு உள்ளான அந்த ஆங்கில பாட ஆசிரியர் பாடசாலையின் சேவை காலம் முடிவடைவதற்கு முன்னரே இடமாற்றம் கோரி வேறு பாடசாலைக்கு சென்றுள்ளார்.
வரலாறு பாடம் கற்பிக்கும் பெண் ஆசிரியரை மாணவர்கள் முன்னிலையில் அதிபர் மிக அருகில் சென்று தன் கையினால் அடிக்க முற்பட்ட போது ஆசிரியர் பின்பக்கமாக நகர்ந்து தப்பித்துள்ளார். அவர் மன உளைச்சலால் பெரிதும் பாதிப்படைந்திருந்தமையால் ஆசிரியருக்கு நீதிவேண்டி பாடசாலையின் சகல ஆசிரியர்களாலும் ஒப்பமிடப்பட்ட முறைப்பாடு வலயக்கல்விப் பணிப்hளரிடம் கையளிக்கப்பட்ட போதிலும் அம்முறப்பாட்டிற்கான விசாரணை நடைபெறவில்லை.
இப்பாடசாலையின் பரிசளிப்பு விழாவுக்கு 125,000 ரூபாவும் வர்ணம் பூசுவதற்காக 75,000 ரூபாவும் பழைய மாணவர்களிடம் அதிபர் தனிப்பட்ட ரீதியாக பெற்றிருக்கிறார். அந்த பணம் இன்றுவரை எங்கே என்பது தெரியவில்லை.
அதிபரின் வினைத்திறனற்ற செயற்பாட்டால் பெற்றோர் தமது பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் இணைப்பதால் பாடசாலை மாணவர்களது எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2015இல் 400 மாணவர்களாக இருந்த தொகை இவ்வருடம் (2022) 202 ஆக குறைவடைந்துள்ளது.அதிபரின் ஊழல்களை தட்டிக்கேட்ட பெற்றோரின் பிள்ளைகள் வேறு பாடசாலைகளுக்கு நாசூக்காக விரட்டப்பட்டுள்ளனர்.பாடசாலையின் ஊழலை தட்டி கேட்கின்ற அல்லது தன் ஊழலுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்ற ஆசிரியர்களுக்கு வலயம் மூலம் இடமாற்றம் வழங்கப்பட்டமையே இப் பாடசாலையின் வரலாறாக காணப்படுகிறது.
பாடசாலையின் வழிகாட்டியாக விளங்க வேண்டிய அதிபர் பரிசளிப்பு விழா ஒன்றில் மேலைத்தேய பாணியில் அநாகரிகமான பெண் ஆடையுடன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தவறான வழிப்படுத்தலை வழங்கி உள்ள சம்பவம் பெற்றோரிடையே பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இத்தகைய அநாகரிகமான உடையில் கலந்து கொண்டு பாடசாலையின் கலை விழாவில் அவர் மாணவர்களோடு ஆடிய நடனக்காட்சி சமூகத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது.
அதிபரின் அடாவடித்தனமான அநாகரிமான செயற்பாடுகள் தொடர்பாக கோட்டக்கல்வி வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகள் மட்டத்தில் தெரிந்திருந்தும் அதிபருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படாமல் இருப்பது பாடசாலை சமூகத்துக்கும் கொட்டடி மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை தருவதாக உள்ளது.2015இல் அதிபராக கடமையைப் பொறுப்பேற்ற இவர் 2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு அடைந்துள்ளார். அதன் பின்னரும் இவரை இப்பாடசாலையில் அதிபராகப் கடமையாற்ற அனுமதிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் இலக்குடன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தற்போதைய அரசிடம் சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க பொருத்தமான தீர்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.எனவே மீண்டும் விசாரணை குழுவை நியமித்து எமக்கு நியாயமான தீர்வினை பெற்றுத் தரும்படி தங்களைவேண்டி நிற்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தினை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்…..file:///C:/Users/DELL%20Latitude%207450/Downloads/DOC271224-27122024100428.pdf