யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலஹா போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் சென்று 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற இளைஞர்கள் குழுவொன்றை கம்பளை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் மூன்று திருட்டுகளும், வவுனியா ஈச்சங்குளத்தில் நான்கு திருட்டுகளும், யாழ் கைட்ஸில் மூன்று திருட்டுகளும், வவுனியா மாமந்துவில் மூன்று திருட்டுகளும், கம்பளை கலஹா பகுதியில் ஏழு திருட்டுகளும், நுவரெலியா கந்தபொல பகுதியில் ஏழு திருட்டுகளும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தந்த பகுதிகளில் உள்ள தங்கக்கடைகள், கோவில்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் மொபைல் போன்கள் மற்றும் பணம் ஆகியவை இவர்களின் முக்கிய இலக்குகள் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, கலஹா பகுதியில் உள்ள மூன்று தங்கப் பொருட் கடைகளில், கோவில் மற்றும் மருந்து கடைகளில் புகுந்து தங்கப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டதுடன், மருந்துக் கடையில் இருந்த பன்னிரெண்டு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எல்லைக்குள் மாத்திரம் இந்த சந்தேக நபர்களுக்கு ஒன்பது பிடியாணைகள் உள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் நான்கு வருடங்களாக இத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் வழங்கிய பிடியாணையுடன் மாத்தளை, கந்தபொல, கலஹா போன்ற பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இந்தத் திருட்டுச் சம்பவங்களைச் செய்து வந்துள்ளனர். .
யாழ்ப்பாணம் பகுதியில் தாலிகொடி, தங்க நெக்லஸ்கள் மற்றும் பணம் ஆகியன திருடப்பட்டதுடன் வீடுகளுக்குச் சென்று கத்தி, போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று குடியிருப்பாளர்களை பயமுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
19, 21, 22, 23, 26 , 33 வயதுகள் கொண்டவர்கள் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் மூலம் சம்பாதித்த பணமெல்லாம் குடு மற்றும் ஜஸ் போதை பொருளுக்கு செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இவர்களால் நாடளாவிய ரீதியில் திருடப்பட்ட தங்கக் கட்டிகள் யாழ்ப்பாணப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் அனைவரும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.