வவுனியாவின் பல பகுதிகளிலும் வீதியால் சென்ற பெண்களை பின் தொடர்ந்து சென்று சங்கிலிகளை அறுத்து வந்ததாக வவுனியாவில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று (11.04) வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற சங்கிலி அறுப்பு சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜய சோமமுனி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களின் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க, அசங்க மற்றும் பொலிஸ் கொஸ்தாபில்களான சிந்நக்க, விதுசன், பொலிஸ் சாரதி திசாநாயக்க உள்ளிட்ட குழுவின் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மோட்டர் சைக்கிளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும், கடந்த ஜனவரி முதலாம் திகதி வேப்பங்குளம், 6 ஆம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரிடம் 2 பவுண் சங்கிலியும், கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூமாங்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இம் மாதம் முதலாம் திகதி நெளுக்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இராசேந்திரகுளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும் அறுத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபர் கடமை இல்லாத நேரங்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய அவரது சொந்த மோட்டர் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அறுக்கப்பட்ட சங்கிலிகளும் அடைவு வைத்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமில் பணியாற்றும் மிகிந்தலையைச் சேர்ந்த 30வயதுடைய இராணுவ வீரரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.