கல்முனையை இன ரீதியில் பிரிப்பதற்கு ஜனாதிபதி இடமளிக்க கூடாது என்று உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை. அத்துடன் இந்த விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் இது பற்றி முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே கூறியுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக அதற்குரிய அமைச்சின் செயலாளருடன் தான் பேசுவதாக ஜனாதிபதி அநுரகுமார, இ.சாணக்கியன் எம்.பி உட்பட்ட தமிழ் கூட்டமைப்பு எம்பீக்களிடம் உறுதி தெரிவித்ததாக சாணக்கியன் கூறியுள்ளமை பற்றி ஜனாதிபதி தரப்பு தெளிவுபடுத்த வேண்டும்
கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் சாணக்கியன் எம்.பி கூறிய கருத்திற்கு பதிலளித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை. அத்துடன் கடந்த கால ஜனாதிபதிகள் இது பற்றி முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே சொல்லியுள்ளனர்.
2020ம் ஆண்டு பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா இக்கோரிகையை முன் வைத்தபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட உலமா கட்சித் தலைவர் இது சம்பந்தமாக முஸ்லிம்களின் கருத்தை கேட்காமல் முடிவுக்கு வரவேண்டாம் என தெரிவித்ததை மஹிந்த ராஜபச ஏற்றிருந்தார்.
இத்தனைக்கும் மஹிந்தவிக்கு எந்த தேர்தலிலும் கல்முனை முஸ்லிம்களில் 20 வீதத்துக்கு மேல் வாக்கு போட்டதில்லை. அது போல் பசில் ராஜபக்ச அமைச்சராக இருந்த போது இது சம்பந்தமாக பேச தமிழ் எம்.பீக்கள் முற்பட்டபோது அது பற்றி பேச வேண்டாம் என அவர் உறுதிபடக் கூறியிருந்தார்.
இந்த பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கல்முனைத்தொகுதி முஸ்லிம்களில் 70 வீதமானோர் வாக்களித்ததுடன் கல்முனை தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற உலமா கட்சி உட்பட பலரும் உதவியுள்ளனர்.
ஆகவே, கல்முனையை வடக்கு கிழக்கு என்றோ தமிழ் செயலகம், முஸ்லிம் செயலகம் என்றோ இன ரீதியில் பிரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
தமிழர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், கல்முனை செயலகம் சம்பந்தமாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் பேசுவதுடன் மட்டும் நிற்காமல் ஜனாதிபதியையும் நேரடியாக கண்டு பேசியுள்ளனர்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இது பற்றி, கல்முனையில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உண்டு என்றும் இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்ற வார்த்தையுடன் நாடாளுமன்றில் அடங்கிவிட்டார்.
இது பற்றி நல்லாட்சி காலத்தில் எத்தனையோ கலந்துரைடாடல்கள் நடைபெற்றது. அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன.
இந்த நிலையில் ஹக்கீம் மீண்டும் பழைய பல்லவி பாடாது எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதியை சந்தித்து கல்முனையை இன ரீதியாக துண்டிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தமிழ் மக்களுக்கு பாண்டிருப்பு செயலகம் வழங்கலாம் என்பதையும் வலியுறுத்த வேண்டும் என்றார்.