சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.இதனால் அவர் மீது விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது/கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,
”நாட்டின் அதியுயர் சட்டத்தை மீறி இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார். அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.
தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளதுடன், சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது. நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் அல்ல.
தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்தச் சட்டத்திற்கான எதிர்மறையான விளைவுகளை நாடு அனுபவிக்க நேரிடும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைதிப் போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.” எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூறியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து ஒன்றுக்கூடி கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.