ரி20 உலகக் கிண்ண போட்டித் தடையை தவிர்த்தார் வணிந்து

டெஸ்ட் ஓய்வில் இருந்து விலகி பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்ட வணிந்து ஹசரங்கவுக்கு ஐ.சி.சி. தடை விதித்ததை அடுத்து அந்த டெஸ்ட் தொடரில் ஆட முடியாமல் போயுள்ளது.

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டது தொடர்பில் வீரர்களின் நடத்தை விதியின் 2.8 பிரிவை மீறியதற்காகவே அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (18) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் 37 ஆவது ஓவரில் வைத்து நடுவரின் முடிவை எதிர்த்த வணிந்து ஹசரங்க, அவரை கேலி செய்ததோடு, நடுவரிடம் இருந்து தனது தொப்பியையும் பறித்தெடுத்தார்.

இது தொடர்பில் நடுவர் ஐ.சி.சியிடம் முறையிட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் எட்டு தகுதியிழப்பு புள்ளிக்களை சேர்த்த வணிந்துவுக்கு அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் அல்லது ரி20 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. இதன்படி முதலில் டெஸ்ட் போட்டி இடம்பெறுவதால் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது தடை அமுலில் இருக்கும்.

இதன்மூலம் எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நான்கு ஆட்டங்களில் தடையை எதிர்கொள்ளும் நெருக்கடியை அவர் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக அவர் கடந்த பெப்ரவரியில் ஆப்கானுக்கு எதிரான போட்டியின்போதும் நடுவருடன் மோதலில் ஈடுபட்டு இரண்டு ரி20 போட்களில் தடையை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மேற்படி போட்டியில், நடுவருடன் கைலாகு கொடுக்கும்போது மோசமாக நடந்து கொண்டதாகக் கூறி இலங்கை ஒருநாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 வீதம் அபராதம் விதித்த ஐ.சி.சி. அவருக்கு மூன்று தகுதி இழக்கு புள்ளிகளையும் வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (22) சில்ஹட்டில் ஆரம்பமாகவுள்ளது

Comments are closed.